Showing posts with label ஆதங்கம். Show all posts
Showing posts with label ஆதங்கம். Show all posts

Friday, December 3, 2010

என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா..

வீட்டை விட்டு ஓடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.எது இவர்களை இவ்வாறு ஓடச்செய்கிறது?.இப்படி ஓடிவருபவர்களில் எத்தனை பேர் வாழ்வில் நின்று வென்றிருக்கிறார்கள்?

வீட்டைவிட்டு ஓடி வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆசிரியர் கண்டிப்பு,படிப்பில் வெறுப்பு,வீட்டில் கண்டிப்பு, வறுமை என ஓராயிரம் கதைகள் இருக்கும்.

பெருநகருக்கு ஓடிவரும் அவர்கள், கையிலிருக்கும் காசு கரையும் வரை இதுவல்லவோ வாழ்க்கை என்று சுற்றிதிரிகின்றனர்.பின்னர் தான் இது வேறு உலகம் என்பதை புரிந்து கொள்கின்றனர். அவர்களின் ஆசைகள் வெகுவிரைவில் நிராசை ஆகிவிடுகின்றன.பெருநகரம் தன் இருண்ட பக்கத்தை அவர்களுக்கு காட்டத்தொடங்குகின்றது.வறுமையும் நெருக்கடியும் அவர்களை துரத்த துவங்குகிறது.உயிர் வளர்க்க ஏதோ ஒரு உணவகத்திலோ கடையிலோ வேலைக்கு சேர்கின்றனர்.பெருநகரத்தின் இயந்திரவாழ்க்கையில் அவர்களும் ஓர் இயந்திரமாய் இணைந்து போகிறார்கள்.

இந்த தொடர் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோமே எப்படி?சாலை சிறுவர்கள் மீதும் தொழிற்சலையில் உள்ள சிறுவர்கள் மீதும் நாம் அக்கறைகாட்ட மறக்கிறோமே ஏன்?

வீட்டை விட்டு நகரத்திற்க்கு ஓடி வருபவர்கள், பின்னர் பெரும் செல்வந்தர்கள் ஆவது போன்றும், குற்றப்பிண்ணனியில் சுகமாய் இருப்பது போன்றும் சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டி செல்கின்றன.எனக்கு தெரிந்து இதிலிருந்து மாறுபட்டு நிற்பது வசந்தபாலனின் வெயில் மட்டுமே.வீட்டை விட்டு ஓடி போனவரின் வறுமை,இயலாமை,ஏக்கம்,பாசம் ஒவ்வொன்றையும் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருப்பார்.
                                          

சிறு கண்டிப்புக்கு அஞ்சி விடுதியிலிருந்து ஓடிவந்தவன் நான். இது நடந்தது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு.ஓட்டமும் நடையுமாயும்,மாட்டுவண்டி,லாரி,ரயில் என்றும் தொடர்ந்த பயணத்தில் ஆரணியிலிருந்து விருதுநகர் வந்து சேர மூன்று நாட்களாகியிருந்தது.

‘யண்ணே ஒத்த ரூவா குடுணே மிட்டாய் வாங்கிகிறேன்’ என்று எப்போதும் சிரித்தமுகத்துடன் என்னை சுற்றிவரும் மகாராஜா சென்றவாரம் ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிப்போனான்.அவன் தாய் அவனுக்கு மிட்டாய் வாங்க காசு கொடுக்கவில்லையாம்.அன்று இரவு அந்த தாய் பெருங்குரலெடுத்து கதறியது என் இதயத்தில் ரணமாய் பதிந்து போனது.இரண்டு நாளில் மகாராஜா வந்துவிட்டான்.ஆனால் அந்த இரவும் அந்த தாயின் கதறலும் என் மனக்கண் முன் வந்துகொண்டே இருக்கிறது.

நான் பின்னோக்கி செல்கிறேன்.அன்று நான் ஓடி போனபோதும் என் தாய் இப்படி தானே கதறியிருப்பாள்.அம்மா அன்று உங்களை அதிகம் அழவைத்துவிட்டேனோ.என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

Friday, November 26, 2010

சோறு கிடைக்குமா..

                                          
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்

*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.

*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

அளவற்ற அறிவியல் வளர்ச்சியும் உற்பத்தி பெருக்கமும் உலகமயமாக்கலும்
இருக்கும் நிலையில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் எங்ஙனம் நிகழ்கின்றன.


நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.5 சதவீதம் என்று மார்தட்டும் ஒரு நாட்டில் 30 சதவீதம் பேர் பசியால் வாடுகின்றனர் என்பது எத்தகைய முரண்.


நகர்மயமாக்கலால் விளைநிலங்கள் மனைகளாகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இருக்கட்டும்.ஆனால் நாட்டின் தரிசு நிலங்கள் அப்படியே இருக்கிறதே. அதை ஏன் பண்படுத்தி விளைநிலங்களாக மேம்படுத்தவில்லை.

தரிசு நில மேம்பாட்டு திட்டம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் இதன் மூலம் பண்படுத்தபட்ட ஒரு செண்ட் நிலத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை.எங்கள் ஊரில் பெருநிலங்கள் இன்றும் தரிசாகவே கிடக்கின்றன.எங்கள் ஆட்சியில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம்.எங்கள் ஆட்சியில் 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம் என்று மாறி மாறி அறிக்கை விடும் கழக தலைவர்கள் அதில் ஒரு ஏக்கரையாவது என் கண்களுக்கு காட்டினால் புண்ணியமாக இருக்கும்.

விளைநிலங்களை தன் பிள்ளைகளுக்கும் பேரபிள்ளைகளுக்கும் வாங்கி போட்டு தரிசாக்குகின்றனர் பல பணம் கொழுத்த அரசியல் வாதிகளும் பெருமுதலாளிகளும்.இதனால் உணவின்றி பாதிக்கபடுபோவது என்னவோ என்னை போன்ற நடுத்தரவர்கமும் அந்த 30 சதவீதமும் தான்.

எனக்கு வருத்தமளிக்கும் மற்றொரு விடயம் உணவு பொருள்களை வீணாக்குவது.வீடுகளிலும் உணவகங்களிலும் பெருவிழாக்களிலும் வீணாக கொட்டும் உணவுகள் டன் கணக்கில் வரும். வீட்டிலும் உணவகத்திலும் பாதி உணவை உண்டுவிட்டு பாதியை விட்டு செல்லும் நபர்களை கண்டால் எனக்கு கோபம் கோபமாக வரும்.விழாக்களில் அளவிற்க்கு அதிகமாக சமைத்துவிட்டு மீதியை வீணாக குப்பையில் கொட்டுவதை கண்டு வருந்தியிருக்கிறேன்.

Ferdinand Dimadura வால் இயக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்படவிழாவில் விருதுவென்ற
குறும்படம் Chicken a la carte.(இது ஒரு உண்மை சம்பவம்) வசதிபடைத்தவர் உணவின்மீது காட்டும் அலச்சியத்தையும். ஏழைகள் உணவின் மீது காட்டும் பக்தியையும், உள்ளங்கை நெல்லிகனி போல தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர். தங்களுக்கு கிடைத்த எச்சில் உணவிற்காக ஜெபம் செய்துவிட்டு உண்ணும் அந்த பக்தி நெகிழச்செய்யும்.இவை என்னுள் பல வினாக்களை எழுப்புகின்றன அவற்றை பிரிதொரு நாளில் விரிவாக பேசலாம்.( நேரம் இருப்பவர்கள் தயவுசெய்து கானொளியை காணவும் உணவின் அருமை புரியும்)
                            

’தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்..

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..


தொடர்ந்து பேசுவோம்......